கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி பிலியந்தலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 58 வயதுடைய நபருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒரு மாதத்தின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொட்டாவ பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 58 வயதுடைய ஒருவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
பலத்த காயமடைந்த நபர் பொல் கொடுவ பிரதேசத்தில் வீதியைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டார்.
எனினும் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
விபத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, காயமடைந்த நபர் மோட்டார் சைக்கிளில் மோதியது சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.
மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கம் தெளிவாக இல்லாததால், விபத்து தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு 16 சிசிடிவிகளை சோதனையிட்டுள்ளனர்.
அதன் மூலம் சந்தேக நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள சேவை நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேகநபர் கஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
