இரத்தினபுரி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1,336 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் டபிள்யூ.பி. சமன் திலக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் 838 பிள்ளைகள் பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரினால் அந்தக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாதாந்தம் ஐயாயிரம் ரூபா பெறுமதியான உணவு வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாதுகாவலர் முறையின்படி 279 சிறுவர்கள் பாதுகாவலர்களைப் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடவலவ மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களில் அதிகளவான சிறார் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாவலர் கிடைக்காத பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் அதற்கான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
