யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
கடந்த சனிக்கிழமை குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிசுவின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.
இதன்போது குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய, குழந்தையின் கை கால் முறிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக
உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.