தாய்லாந்துக்கு அனுப்பப்பட்ட முத்துராஜா அல்லது சக் சுரின் என்ற யானையை இலங்கைக்குத் திரும்பியனுப்பும் எண்ணம் இல்லை என்று தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா (Varawut Silpa-archa) இன்று தெரிவித்துள்ளார்.
யானை முழுமையாக குணமடைந்தவுடன் அதனை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு இலங்கையின் சிரேஷ்ட பௌத்த பிக்கு ஒருவர் பெங்கொக்கிடம் முன்வைத்ததாக கூறப்படும் கோரிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் வரவுட், இதனை தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தை வந்தடைந்த சக் சுரின், இலங்கையில் 22 வருடங்கள் வாழ்ந்த போதிலும், தனது புதிய சூழலுக்கு பழக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சக் சுரின் தற்போது மன்னரின் ஆதரவில் இருக்கிறது.
எனவே அதனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது என்பது சாத்தியமற்றது என்றும் வரவுட் கூறினார்.
தாய்லாந்தின் ஹாங் சாட் மாவட்டத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் சக் சுரின் தற்போது 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் காலத்திற்குப் பின்னர், கால்நடை மருத்துவர்கள் அதனை இன்னும் முழுமையாக சோதனை செய்வர்.
சக் சுரினின் வலது கண் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முன் இடது கால் வளைக்க முடியாததாகவும், நகங்கள் மற்றும் நான்கு கால் பாதங்களிலும் ஆரோக்கியமற்ற நிலை காணப்படுவதாகவும் முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் இரண்டு யானைகள் குறித்தும் தாய்லாந்து அவதானம் செலுத்தி வருவதாகவும் தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.