பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கானை கைதுசெய்ய அந்த நாட்டு பொலிஸார், லாஹுரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்றிரவு செல்ல முயற்சித்தபோது, மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கானை கைதுசெய்து எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாவட்ட நீதிமன்றம் ஒன்று நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இம்ரான் கானை கைதுசெய்வதற்கு பொலிஸார்இ லாஹுரில் உள்ள அவரின் இல்லத்திற்கு செல்ல முயற்சித்தபோது, இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களைக் கலைப்பதற்காக, பொலிஸார், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இம்ரான் கானுக்கு எதிராக 70ற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், இம்ரான் கானை கைதுசெய்து எதிர்வரும் 18ம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில்இ நேற்று கருத்து வெளியிட்டுள்ள இம்ரான் கான், சிறைக் கூடத்தில் இந்த இரவுப் பொழுதைக் கழிப்பதற்கு தாம் மனதளவில் தயாராகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை இரவுகள் என்று தமக்கு தெரியாது என்றும், ஆனால், அனைத்திற்கும் தாம் தயாராகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், தமது ஆதரவாளர்கள் சுதந்திரத்திற்காக வெளியே வந்து போராட வேண்டும் என்றும் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.