மாதிவெல கிம்புலாவல பகுதியில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கிம்புலாவல வீதியில் இயங்கும் உணவகங்கள் அகற்றப்படவுள்ளதாக செய்திகள் பரவி வருவதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுயதொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேற்படி வீதி உணவுக் கடைகளை அகற்றுவதற்கு குறிப்பிட்ட பின்புல காரணம் எதுவும் இல்லை என தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, வீதி அடையாளங்களை ஏற்படுத்துவதற்கும், பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த கடைகள் சுமூகமான போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக பயணிகள் மற்றும் ஓட்டுநர்களிடமிருந்து ருனுயு புகார்களைப் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே இந்த வீதியுணவு விற்பனை நிலையங்கள் இயங்கியதாகவும், தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கிறது எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார்.
இதனால் தமது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ள இடம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் அந்த இடத்திற்கு அருகில் உள்ள கடை உரிமையாளர்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் நகர அபிவிருத்தி அதிகாரசபையில் (யுடிஏ) கூட்டம் நடைபெறும் என்றும், அவர்களின் தொழில்களை தொடர முறையான நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.