பத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து, அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபரின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் கைதாகினர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கடவத்தை பகுதியில் வைத்து கைதானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தம்பதியினரான குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தம்பதிகள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களில் 27 வயதான கணவரும் 23 வயதான மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிலதிபரை கொலை செய்ததை சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸாரின் உள்ளகத் தகவல்களின்படி, பிரதான சந்தேகநபர் கந்தானையிலிருந்து கடவத்தைக்குச் சென்று கடவத்தையில் உள்ள பிரபல ஆயத்த ஆடை விற்பனை நிலையத்திற்கு அருகில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபர் கடைக்கு அருகில் தங்கியிருப்பதாக பிரதான சந்தேகநபரின் மனைவியின் உறவினர் ஒருவர் கந்தானை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 30ஆம் திகதி தொழிலதிபரை கொலைசெய்த பின்னர், தம்பதியினர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
தொழிலதிபரின் கிரெடிட் கார்டில் இந்தோனேசியா செல்வதற்கு இரண்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, தொழிலதிபரின் சொந்த காரில் அதிவேக நெடுஞ்சாலையில் விமான நிலையத்திற்கு பயணம் செய்துள்ளனர்.
எனினும், விசா பிரச்சினை காரணமாக அவர்களால் வெளிநாடு செல்ல முடியாமல் போயுள்ளது.
அத்துடன், கார் பழுதடைந்ததால் அவர்கள் பேருந்தில் மீண்டும் கொலன்னாவைக்கு வந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
பின்னர், அவர்களின் தொலைபேசிகளைக் கண்காணித்த புலனாய்வாளர்கள், அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளதை கண்டறிந்தனர்.
அவர்கள் உறவினர் ஒருவரால் கடவத்தைக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
தொழிலதிபரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்ததை சந்தேக நபர் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மரணத்துக்கு சந்தேக நபர் தான் காரணம் என பொலிஸார் நம்புகின்றனர்.
ஆனால் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் விதம் மற்றும் தனது மனைவிக்கு இதில் தொடர்பு இல்லை என்பதைக் காட்ட அவர் கடுமையாக முயற்சி செய்கிறார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரதான சந்தேக நபர் கடந்த 30ஆம் திகதி மாலை 6.37 மணியளவில் பெலவத்தையில் உள்ள தொழிலதிபரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சுமார் இரண்டு மணிநேரம் அந்த வீட்டில் அவர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதன் போது கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மொபைல் செயலி மூலம் இந்த தொழிலதிபரை தான் அறிந்து கொண்டதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேக நபர் அவசர தேவைக்காக 100,00 ரூபாவை தருமாறு தொழிலதிபரிடம் கேட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க வர்த்தகர் மறுத்ததால் கோபமடைந்து அவரது தலையில் கட்டையால் தாக்கியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
பின்னர் தொழிலதிபரை நீச்சல் தடாகத்தில் வீசிவிட்டு அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு கொலன்னாவைக்கு சென்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
அவர் மனைவியிடம் தனக்கு ஒரு பிரச்சினை இருப்பதாகவும், அதனால் சில நாட்களுக்கு வெளியூர் செல்வதாகவும், தன்னுடன் வருவதாக மனைவி வற்புறுத்தியதால் அவளையும் அழைத்துச் சென்றதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
#Sunday Observer