நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் நாளை (28) முதல் வெள்ளை முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமும் 70 இலட்சமாக இருந்த முட்டை உற்பத்தி தற்போது 35 முதல் 40 இலட்சமாக குறைந்துள்ளது.
சந்தையில் முட்டை தட்டுப்பாடு மற்றும் ஒரு முட்டை 70 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (26) விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஒரு முட்டை உற்பத்தி செய்ய 46 ரூபா செலவாகும் என்றும், மொத்த வியாபாரிக்கு 49.50 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்தால், மொத்த வியாபாரி சில்லறை விற்பனையாளருக்கு 53 ரூபாவுக்கு முட்டையை விற்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டது.
இதன்படி, சில்லறை விற்பனையாளர் 2 ரூபா இலாபத்தை வைத்து ஒரு முட்டையை 55 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதிக இலாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சில்லறை வியாபாரிகளுக்கு முட்டையை விற்பனை செய்யாமல், ஹோட்டல், பேக்கரிகளுக்கு 53 ரூபாவுக்கு மொத்த வியாபாரிகள் முட்டை விற்பனை செய்து வருவதும், இதனால் சந்தையில் செயற்கையாக முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதும் தெரியவந்தது.