சிறுமியை வன்புணர்வு செய்த நபருக்கு கண்டி மேல் நீதிமன்றம் 60 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
குற்றாவளியின் மனைவியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும், அவளை கர்ப்பமாக்கியதற்காகவும் அவர் மீது மூன்று தனித்தனி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.தர்ஷிகா விமலசிறி ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் இருபது வருடங்கள் கடுங்காவல் தண்டணை விதித்து உத்தரவிட்டார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் கண்டி மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட வத்தப்பொலவில் குற்றம் சாட்டப்பட்டவரால் சிறுமி மூன்று தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு குற்றச்சாட்டின் கீழ் தலா 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தண்டப்பணம் செலுத்தப்படாவிட்டால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையும், நட்டஈட்டை செலுத்தத் தவறினால் இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என கண்டி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டி மேல்நீதிமன்றம் இவ்வாறான ஒரு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு அறுபது வருட சிறைத்தண்டனை விதித்தது இதுவே முதல் தடவையாகும்.