எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான 03 ஆம் இலக்க, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின் போது, சட்டவிரோதமான செயல்கள், இலஞ்சம், கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களுக்கு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சட்டம் செயலிழந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, சட்டத்தின் ஆட்சி மாற்றப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்துக்காக தேர்தல் ஆணைக்குழுவின் பூரண ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக எதிர்வரும் தேர்தலுக்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.