தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலை இடிந்து வீழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்சூ நகரிற்கும் தபு கவுண்டி நகரிற்கும் இடையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியொன்றே இவ்வாறு இடிந்து வீழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் மேலும் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை சீன அதிகாரிகள் இதுவரை அறிவிக்கவில்லை.
காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்றாலும், மாகாண அரசாங்கம் 500 அவசரகால மீட்புப் பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நெடுஞ்சாலையின் இடிந்து விழுந்த பகுதியில் 20 வாகனங்கள் விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான குவாங்டாங் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், 110,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.