மயக்கவியல் நிபுணர்கள் உள்ளிட்ட தற்போது இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான வைத்திய நிபுணர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை வழங்காதிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவையில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவும் பல பகுதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு செல்வார்களாயின், அவர்களை பணிநீக்கம் செய்து தேவையான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாட்டில் குறிப்பிட்ட சில துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இவ்வாறான வைத்தியர்களின் புலம்பெயர்வினால் நாட்டின் சுகாதார சேவையில் நெருக்கடி நிலை ஏற்பட்டது.
600-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் விசேட பயிற்சிக்காக தற்போது வெளிநாடு சென்றுள்ளனர்.
அவர்களில் சுமார் 300 பேர் இந்த ஆண்டு நாட்டிற்கு வரவிருக்கின்றனர்.
அவர்களின் வருகையின் பின்னர் ஒவ்வொரு துறையிலும் தற்போது நிலவும் நிபுணத்துவம் பெற்றவர்களின் பற்றாக்குறை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.