குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜாங்கனே சத்தாரதன தேரரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணையின் போது, கோத்தமலாவில் உள்ள வங்கிக் கணக்கொன்றிலிருந்து 8 கோடி ரூபா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோத்தமலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தப் பணத்தை அனுப்பியதன் பின்னணியில் உள்ளார்களா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பின்சிறி என்ற நபர் ஆலயத்தின் அபிவிருத்திக்காக எட்டு கோடி ரூபாவை அனுப்பி வைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பணப் பரிவர்த்தனைக்குப் பின்னணியில் ஒரு தொலைக்காட்சி நடிகர் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தகவலின்படி குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வாளர்கள் அங்கு சென்று ஆலயம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்தனர். கோயிலின் வளர்ச்சிக்கு ஐம்பது லட்சம் ரூபாய் கூட செலவிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை அநுராதபுரத்தில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து எட்டு இலட்சம் ரூபா எடுக்கப்பட்டு கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சத்தாரதன தேரர் மற்றும் பிரபல டெலி நடிகருடன் இணைந்து இந்த பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை ஆபாசமான வார்த்தைகளால் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 28ஆம் திகதி சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .