புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியில் கஹட்டகஸ்திகிலிய, குடாப்பட்டிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 08 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறியுடன் பெண்ணொருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணும், அங்கு பயணித்த அவரது இரு மகள்களும் படுகாயமடைந்து கஹகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்தான நிலையில் இருந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடாபட்டிய சத்தாதிஸ்ஸ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சமய நிகழ்ச்சியின் பின்னர் குறித்த சிறுமிகள் இருவரும் நேற்று (04) மாலை தமது தாயாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்தின் போது இரு சிறுமிகளும் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
