சிறையிலுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் பிரதான உதவியாளரான பெண் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் கொழும்பு குற்றப்பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருடன், சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான 208 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டியதாக கருதப்படும் சுமார் மூன்று இலட்சம் ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது போதைப்பொருள் குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் கணவர் ஊடாக மஹர சிறைச்சாலையில் கடத்தல்காரரை அறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தல்காரர் குறித்த பெண்ணின் கணவரிடம் வழங்கும் அறிவுறுத்தல்களை அவர் சந்தேக நபரான பெண்ணுக்கு வழங்குவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, சாலமுல்ல, கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளுக்கு போதைப்பொருள் பெருமளவில் விநியோகிக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.