க.பொ.த உயர் தர பரீட்சைக் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான பரிசீலனைகள் நிறைவடைந்துள்ளன.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நிறைவடையும் வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என தமது ஆணைக்குழு வழங்கிய பரிந்துரையை கருத்திற்கொள்ளாமல் பிரதிவாதிகள் நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான பரிசீலனைகள் இன்று நிறைவடைந்துள்ளன.
காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரரான மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய, மின்வெட்டை தடுக்கும் இடைக்கால உத்தரவை வழங்குவதா என்பது தொடர்பிலும், பிரதிவாதிகளை நீதிமன்றத்திற்கு அழைப்பதா என்பது தொடர்பிலும் எதிர்வரும் வியாழன் அல்லது வௌ்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என நீதியரசர் குழாம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 9 மணிக்கு முன்னர் அனைத்து தரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பிரதிவாதிகளின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளுக்கிடையே நீண்ட விவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.