சமுர்த்தி பயனாளிகளில் சுமார் 40% பேர் தகுதியற்றவர்கள் என உலக வங்கியின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜி.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிதிக்குழு முன்னிலையில் உரையாற்றிய அவர், தகுதியற்றவர்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை வழங்கி அதில் குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றுக்கொள்ளும் ஊழல் அதிகாரிகள் சிலர் இருப்பதாக தெரிவித்தார்.
இதன்படி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வதற்கு சரியான தரவுகளுடன் கூடிய ஆவணம் ஒன்றை தயாரிப்பது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சலுகைகள் செலுத்துவதில் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், அதிகாரிகளின் நடவடிக்கைகளால், இதுவரை நலத்திட்ட பயனாளிகள் பட்டியலை வெளிப்படையாகத் தயாரிக்க முடியவில்லை என்பதும் தெரியவந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் பிரகாரம் சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி உதவிகள் வழங்குவதில் ஊழலின்றி வெளிப்படைத்தன்மையுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான பொறுப்பு நலன்புரி நன்மைகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளமை இங்கு தெரியவந்துள்ளது.
இதன்படி, தரவு சேகரிப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
எனினும், சமுர்த்தி, கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்கள் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பதாரர்களின் அறிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொண்டால் சட்டத்தின் 21 மற்றும் 22 வது பிரிவின்படி அவர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர்.
இதன்படி, குறித்த சரத்துகள் திருத்தப்படும் வரை அனைத்து களப்பணிகளில் இருந்தும் விலகுவதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ஜி.விஜேரத்ன அரசாங்க நிதி தொடர்பான குழுவிடம் தெரிவித்திருந்தார்.