குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து இடைநிறுத்தப்பட்ட ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் கார் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷானி அபேசேகரவின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இந்தச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற போது ஷானி அபேசேகர வீட்டில் இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் கான்ஸ்டபிள் ஷானி அபேசேகரவை அறியப்படுத்தவில்லை எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷானி அபேசேகர தனது காரை பழுதுபார்க்கும் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது எரிபொருள் கசிவு ஏற்பட்டதைக் கண்டறிந்துள்ளார்.
அதன்போது வாகன எரிபொருள் தாங்கிக்கு அருகில் தோட்டாக் குழி இருப்பதை அவர் கண்டுபிடித்துள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் காவலுக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
அதற்கமைய, ஷானி அபேசேகர, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவலர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தவறுதலாக இடம்பெற்றதாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் விசாரணையின் பின்னர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை பொரளை பொலிஸாரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஷானி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Lankadeepa