விவசாயத் திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக 2023 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளுக்கு தேவையான நிதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ரன்மினிதன்னவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கமநல அபிவிருத்திச் சட்டம் தொடர்பில் அமைச்சர் அமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நாட்டில் 47,000 ஏக்கர் பயிரிடப்படாத நெற்பயிர்கள் உள்ளதாகவும், 14,000 ஏக்கர் நிலம் இந்தாண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும், ஐந்து வருடங்களாக பயிரிடப்படாத வயல்களை தரிசு வயல்களாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
விவசாய சமூகம் 2023 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும், திட்டங்களுக்கு தேவையான நிதி ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் விவசாயத்துறை மற்றும் விவசாயிகளின் அபிவிருத்திக்காக பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.