வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வங்கித் துறை மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஏனைய மக்களை விட குறைந்த வட்டி வீதத்தில் வீட்டுக் கடனைப் பெற முடியும் என அவர் கூறினார்.