ஓமானில் சிக்கியுள்ள வீட்டுப் பணிப்பெண்களின் நலன் விசாரித்தல் மற்றும் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை ஓமானிய தூதரகம் மறுத்துள்ளது.
இலங்கைக்கு அனுப்புமாறு பெண்களிடம் இருந்து அதிகளவான கோரிக்கைகள் தமக்கு கிடைத்துள்ளதாக ஓமானிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர், பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இருந்து சுற்றுலா விசாவில் துபாய் வழியாக ஓமானுக்கு வந்தவர்களாவர்.
இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சில காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாக தூதரகம் கூறுகிறது.
77 வீட்டுப் பணியாளர்கள் தற்போது பாதுகாப்பான வீடுகளில் இருப்பதாகவும் அவர்களில் 63 பேர் சுற்றுலா விசாவில் உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 பேர் மாத்திரமே வேலை விசாவில் வந்துள்ளதாக ஓமானிய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆட்கடத்தல்காரர்கள் சுற்றுலா விசா மூலம் பெண்களை ஓமானுக்கு அனுப்புவதால் காணாமல் போகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த பெண்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு பாரிய செலவாகும் என்பதால், இதுவரையில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஓமானிய தூதரகம் மேலும் தெரிவிக்கிறது.