வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று புற்று நோயாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு அனுப்பிய பெருந்தொகை மருந்துப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு உரிய ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இவ்வாறு சிக்கியுள்ள மருந்துகளில் சுமார் பத்தாயிரம் டொலர் பெறுமதியான இருபது வகையான அத்தியாவசிய மருந்துகள் புற்று நோயாளர்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று இந்தியாவில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்திடம் இருந்து இவற்றை கொள்வனவு செய்து நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருந்துப் பற்றாக்குறையினால் மருத்துவமனையில் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவதானித்த பின்னர் அங்குக் கடமையாற்றும் வைத்தியர்கள் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே குறித்த மருந்துப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் அவற்றை வழங்கிய இலங்கையர்களும், அதற்கான கோரிக்கையை விடுத்த வைத்தியர்களும் கடும் விரக்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.