தாய் பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
அத்துடன், தாயின் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 34 தாய்மார்களும் ஒரு வாரத்திற்கு முன் குழந்தை பெற்ற தாய்மார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
‘உயிரினங்களின் உடலில் பிளாஸ்டிக் விஷம் இருப்பது ஒரு பயங்கரமான சூழ்நிலையாகும். அவை செல்களை பாதிக்கின்றன. புற்றுநோயை உருவாக்க கூடியன. தாயின் பாலில் பிளாஸ்டிக் விஷம் கலந்திருப்பது ஒரு பயங்கரமான நிலை என்பதைச் சொல்லத் தேவையில்லை’ என ஆய்வில் ஈடுபட்டுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
மைக்ரோ-பிளாஸ்டிக் என்பது 5 மிமீக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்களாகும். தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டன.
மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் முதலில் கடல் உயிரினங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் அடிக்கடி வீசப்படுதே இதற்குக் காரணம்.
அதன் பின்னர் விஞ்ஞானிகள் நிலத்தில் வாழும் உயிரினங்களின் உடலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
தற்போது, தாயின் பாலில் நுண்ணிய பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதை உறுதிசெய்துள்ளதன் மூலம், மனித உடலிலும் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பதை அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
#NDTV
