Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்கள்

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்கள்

காய்கறிகள், பழங்கள், உணவு பதார்த்தங்களைப் பாதுகாப்பதற்குக் குளிர்சாதனப் பெட்டி ஒரு சிறந்த உபகரணமாகும். உணவுப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மையும் அதில் இருக்கிறது.

பொதுவாகக் குளிர்சாதனப் பெட்டியை 30 முதல் 38 பாகை பாரன்ஹீட் வெப்பநிலையில் வைத்துப் பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த வெப்பநிலையில் உணவுப் பொருட்களை வைத்திருப்பதால் நுகர்வுக்கு ஏற்ற வகையில் அதனைப் பராமரிக்க முடிகின்றது.

எனினும் எல்லா வகையான உணவுப் பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது. தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவுப் பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லதல்ல என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தக்காளி: இதனை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்தால் அதன் தரமும், சுவையும் குறைந்துபோய்விடும். குளிர்ந்த வெப்பநிலை தக்காளியின் உள் அடுக்குகளின் தன்மையை மாற்றிவிடும். குளிர்சாதனப் பெட்டிக்குள் அதிக நாட்கள் தக்காளியை வைத்திருந்தால் அதன் மென்மைத்தன்மை நீங்கிவிடும். வெளிப்புற தோல் சுருங்கிப்போய் சுவையற்றதாக மாறிவிடும். தக்காளியை அறையின் வெப்பநிலையில் காற்றோட்டமாக வைத்திருப்பதே நல்லது.

கத்திரிக்காய்: இது வெப்பநிலை உணர் திறன் கொண்ட காய்கறியாகும். 50 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழேதான் பிரிட்ஜின் வெப்பநிலை இருக்கும் என்பதால் அந்த வெப்பநிலை கத்தரிக்காய்க்கு உகந்ததல்ல. இதனால் அதன் சுவைகுறைத்துவிடும். அறையின் வெப்பநிலைதான் கத்திரிக்காய்க்கு உகந்தது. அதுபோல் பிற காய்கறிகள் பழங்களுடன் கத்திரிக்காயை சேர்த்து வைக்கக்கூடாது. தனியாக வைத்திருப்பதுதான் நல்லது.

பாண்: பொதுவாகவே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குளிர்ந்த வெப்பநிலை சில பொருட்களை எளிதில் உலரவைத்துவிடக்கூடும். பாணும் குளிர்ந்த வெப்பநிலையில் உலர்ந்துபோய்விடக்கூடியது. குளிர்ந்த சூழலில் நீண்ட நேரம் இருந்தால் அதன் தன்மையே மாறிப்போய்விடும்.

வெங்காயம்: இதனைக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் மென்மையாக மாறிவிடும். அதில் பூஞ்சையும் படரக்கூடும். வெளியே காற்றோட்டமாக வைத்திருந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

தோடம்பழம்: தோடம்பழம் சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலத்தன்மை கொண்டது . அதனைக் குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்தால் தோல் பகுதியில் புள்ளிகள் தோன்றக்கூடும். மென்மை தன்மையும் மாறக்கூடும். கடினமான தோல் கொண்ட தோடம்பழத்துக்கு வெப்பமான சூழல்தான் ஏற்றது.

பப்பாளி: பப்பாளியையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. காற்றோட்டமான இடத்தில்தான் பப்பாளியை வைக்க வேண்டும்.

தேன்: இது இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அறையின் வெப்பநிலையில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம். குளிர்சாதனப் பெட்டிக்குள் சேமித்துவைப்பதன் மூலம் அது கடினமாகிவிடும்.

ஊறுகாய்: ஊறுகாய் தயாரிக்கும்போது உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. அவை கெட்டுப்போகாத அளவிற்குப் பதப்படுத்தப்படுகிறது. அதனால் அதனைக் குளிர்ந்த வெப்பநிலையில் வைத்திருப்பது தேவையற்றது.

வாழைப்பழம்: வாழை மரங்கள் வெப்பமான காலநிலையில் வளர்க்கப்படுகின்றன. பழங்களை அறை வெப்பநிலையில் வைக்கும்போது ஊட்டச்சத்துக்கள் சீராக இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இயற்கையாகப் பழுக்கும் செயல்முறை பாதிப்புக்குள்ளாகும்.

ஆப்பிள்: இதனை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை விட வெப்பமான இடத்தில் வைத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். அறை வெப்பநிலையில் 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் உபயோகிக்கலாம்.

Keep exploring...

Related Articles