மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் கூறுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நாட்டுக்கு தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், மேற்படி திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு கூறுவதற்கு நாட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தேவையில்லை எனவும், பொதுமக்களின் நலன் கருதி மின் கட்டணத்தைக் குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த ஆணைக்குழு பங்களிப்புச் செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
