‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை, வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணி, ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவி காலம் நிறைவடைந்திருந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியானது 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டது.
13 பேர் கொண்ட இந்த செயலணியின் தலைவராக வண.கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார்.
இலங்கைக்குள் ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ மற்றும் சட்ட வரைவைத் தயாரித்து, நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா எனத் தீர்மானித்து பொருத்தமானதாகக் கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதை நோக்காகக் கொண்டு இந்த செயலணி உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த செயலணி சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.