கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்வர் ‘வக்கிரமானவர் மற்றும் ஆபாசத்திற்கு அடிமையானவர்’ என்று தெரியவந்துள்ளது.
அவரது மனோதத்துவ சுயவிவரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளில் இது தெரியவந்துள்ளதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை என பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் எந்தவித தயக்கமும் இன்றி விசாரணை குழுவிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தா பெண் மருத்துவர் 36 மணி நேர பணிக்கு பின்னர் மருத்துவமனை மாநாட்டு அறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருக்கு 16 வெளிப்புற காயங்களும், 09 உள் காயங்களும் காணப்பட்டுள்ளதுடன், அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓகஸ்ட் 9ஆம் திகதி அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் சந்தேக நபர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராயின் கைப்பேசியில் பல ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.