கறுவாத்தோட்டம் – வோர்ட் பிளேஸ் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இந்தக் குற்றத்தைச் செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றை திருடும் நோக்கில் கொலை செய்துள்ளதாக சந்தேகநபர்கள் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
குற்றம் செய்யும் நோக்கில் தாம் கிராண்ட்பாஸில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்று தர்மபால மாவத்தை வழியாக விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் சென்று மேற்கொண்ட கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு அது தோல்வியடைந்துள்ளது.
அதனையடுத்து, வோர் பிளேஸிற்கு வந்ததாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அங்கு சென்ற போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதியை அணுகி வாடகைக்கு பயணிக்க முயன்றுள்ளதுடன், அவர் அதனை மறுத்துள்ளார்.
குறித்த சாரதியின் கைப்பேசியை எடுக்க முயன்ற போது ஏற்பட்ட தகராறில் முச்சக்கர வண்டி சாரதி கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சாரதியை முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் அமரவைத்துவிட்டு கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு மற்ற இருவருடன் முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றதாக குற்றத்தின் பிரதான சந்தேக நபர் வெளிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 07 நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.