உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று (20) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் விஜயமாக நாட்டுக்கு வருகைத் தந்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து இவர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மலையகத் தமிழ் தலைவர்கள், வடக்கு- கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.