14 வயதுடைய சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறையில் அடைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் புத்தல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த 9ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் சிறுமியின் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உறவினர்கள் பொலிஸாரிடம் அறிவித்ததையடுத்து, சிறுமியின் காதலன் எனக் கூறும் புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறுமி பற்றிய எந்தத் தகவலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், பொலிஸாரால் குறித்த இளைஞனின் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இருவரின் வாக்குமூலத்தின் பிரகாரம், புத்தலவுக்கு அருகில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் தயாரிக்கப்பட்ட பாதாள அறையில் பதுங்கியிருந்த சிறுமியை பொலிஸ் அதிகாரிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
சந்தேகநபர் சிறுமியின் மூத்த சகோதரியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரை தன்னுடன் செல்ல அழைத்த போது, அவர் அதனை மறுத்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு, சந்தேக நபர் சிறுமியின் சகோதரியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.