சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
வழமையான அரசியலில் செயற்பட்டு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை எதிர்த்து, அதனை சீர்குலைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாடு 2022ல் இருந்த நிலைமைக்குத் திரும்ப இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
“மீண்டும் வீழாத பெருமைமிகு நாடு என்றென்றும்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கயாஷான் நவனந்தனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.