இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதன்போது துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 93 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களையும், அணித்தலைவர் தனஞ்சய த சில்வா 70 ஓட்டங்களையும் மற்றும் ஆட்டமிழக்காமல் கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா 92 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் அசித பெர்ணான்டோ 4 விக்கெட்களையும், விஷ்வ பெர்ணான்டோ, பிரபாத் ஜயசூரிய மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 353 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்று கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியது.
இதன்போது துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அதனப்படையில் 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 318 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமார 4 விக்கெட்களையும், கமிந்து மென்டிஸ் 3 விக்கெட்களையும் மற்றும் பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற ரீதியில் தனதாக்கி கொண்டது.