சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்தார்.
நிதி அமைச்சில் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதால், அதன் பிரதிபலன்களை காண முடிந்துள்ளதாகவும் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வலுவடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதென தெரிவித்த அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இதன்போது நாட்டை பொருளாதார சரிவிலிருந்து மீட்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை அங்கீகரிப்பதானது இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக ஏற்றுகொள்ளப்பட்ட கூட்டு முயற்சியை வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மை, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள், எதிர்கால நோக்கு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் பொருளாதார செயற்பாடுகளின் பலதரப்பட்ட விடயப்பரப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காகவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் இரு தரப்புக்கும் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.