கம்பளை பிரதேசத்தில் காணாமல் போன இளம் காதலர்கள் இருவர் பொலிஸ் காவலில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழும் நோக்கில் இரகசியமாக ஒபேசேகரபுரவில் இருந்து கம்பளை – கஹவத்த பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது காதலுக்கு வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், தனது சிறிய தாயை தேடி வந்ததாகவும், அங்கு இருவரும் சேர்ந்து வாழ எதிர்பார்த்தாகவும் சிறுவன் கம்பளை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இருவரும் கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும், ஆனால் சிறிய தாயை கண்டுபிடிக்க முடியாததால், அவர்கள் காலை முதல் மாலை வரை அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
வயதிலும், உடலிலும் மிகவும் சிறியதாக காட்சியளிக்கும் இந்த இரு சிறுவர்களை அவதானித்த கிராம மக்கள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனிடம், குடும்பம் நடத்தும் திறன் உள்ளதா என நீதவான் கேட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த பாடசாலை மாணவன் இம்மாதம் 29 ஆம் திகதி வரை வெரவல சிறுவர் இல்லத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் மாணவி மருத்துவ பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.