சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணிக்கு எவரும் உரிமை கோராத நிலையில், அதனை அபிவிருத்தித் திட்டமாக பயன்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் இயக்கத்தின் போது எரிக்கப்பட்ட காணி மற்றும் சொகுசு வீட்டை நீதி அமைச்சர் நேற்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வுச் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசாங்க சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ள குறித்த இல்லம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
ஆரம்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ சர்ச்சைக்குரிய மல்வான சொத்தின் உரிமையாளராக கருதப்பட்டார்.
தொம்பே, மல்வானையில் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்கும் ஆடம்பர வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கும் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த சொத்துக்களுடன் தொடர்பு இல்லை என அவர் மறுத்ததையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த கம்பஹா உயர்நீதிமன்றம், சொத்து உரிமையாளர் இல்லாததால், அது அரசின் சொத்தாக அறிவிக்கப்படும் என அறிவித்தது.