விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத வகையில் ஏற்பட்டுள்ள சுகயீனம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.