மன்னாரில் 1,472 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரும் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மன்னார் மற்றும் உப்புக்குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை மற்றும் மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரிடமிருந்த விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 20 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் உப்புப்பாகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, வீடொன்றில் இருந்து 1,432 போதை மாத்திரைகள் மற்றும் முச்சக்கரவண்டியில் இருந்து 20 போதை மாத்திரைகள் என்பனவற்றுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.