கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு பொலன்னறுவை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு சுமார் 100 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்களில் 18 பேர் பெரியாறு பாலம் அருகே உள்ள புலஸ்திபுர பகுதியில் பொலிஸில் சரணடைந்தனர்.
மேலும் 34 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் பொலன்னறுவை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதிகள் அனைவரையும் ஜனவரி 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் தொடர்பில் பெப்ரவரி 09 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற மேலும் 13 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.