இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த வேளையில் இரு தடவைகள் மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டி 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், சிம்பாப்வே அணி 22.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக ஜாய்லார்ட் கும்பி 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.