களுத்துறை சிறைச்சாலையில் மேலும் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரு வாரத்தில் சிறைச்சாலையில் பதிவான மூன்றாவது மரணம் இதுவாகும்.
பாணந்துறை – மோதரவில பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே நேற்று (28) பிற்பகல் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், திடீர் சுகவீனம் காரணமாக களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்த நிலையில், மற்றுமொரு கைதி திடீர் சுகவீனம் காரணமாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 24ஆம் திகதி இரவு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.