20 நாள் விடுமுறையில் வெளிநாடு சென்ற நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் இலங்கை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் தென் மாகாணத்தில் உள்ள ஒரு பிரிவிலிருந்து நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவுக்கு வந்த இந்த அதிகாரி, 20 நாள் விடுமுறைக்கு அனுமதி பெற்று செப்டெம்பர் 15ஆம் திகதி வெளிநாட்டுக்குச் சென்று இன்று வரை இந்த நாட்டிற்கு திரும்பவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், கிழக்கு மாகாணத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்புக்கு செல்லும் அனுமதியற்ற பேருந்துகளில் பணம் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தென் மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் மூன்று மனுக்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ விடுமுறை முடிந்த பின்னரும் அவர் இலங்கைக்கு திரும்பாதது தொடர்பான உள்ளக விசாரணையில், இந்த அதிகாரி தென் மாகாணத்தின் முக்கிய நகரமொன்றில் உள்ள இரும்பு வியாபாரி ஒருவரிடம் 500,000 ரூபா கப்பம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வர்த்தகர் தென் மாகாண புலனாய்வு பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், உயர் பொலிஸ் அதிகாரியை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை அறிந்த அவர் இலங்கைக்கு வருவதை தவிர்த்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
