நியூஸிலாந்தை 70 ஓட்டங்களினால் தோற்கடித்துள்ள இந்திய அணியானது, 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 117(113) ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 105 (70) ஓட்டங்களையும், சுப்மன் கில் 80 (66) ஓட்டங்களையும் மற்றும் ரோஹித் சர்மா 47 (29) ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் 398 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நியூஸிலாந்து சார்பில் டேரில் மிட்செல் 134 (119) ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 69 (73) ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் ஷமி 7 விக்கெட்டுகளை அதிகபடியாக கைப்பற்றினார்.
இதன் மூலம் 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்தியா 2023 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதலாவது அணியாக காலடி எடுத்து வைத்தது.