குழந்தைகளின் போசாக்கு குறைபாடு தொடர்பில் அரச நிறுவனங்கள் முன்வைக்கும் புள்ளிவிபர அறிக்கைகள் நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை என நாடாளுமன்ற விசேட குழுவில் தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, போசாக்கு தேவையுடைய சிறுவர் குழுவை சரியான முறையில் கண்டறிந்து அறிக்கையை வழங்குவதற்கு உரிய அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.
தோட்டங்களில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் மன உளைச்சல் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமை அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காகவும், அவ்வாறாயின், குறுகிய, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளைக் கண்டறியவும், அடையாளம் காணப்பட்டவை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், பல விசேட விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சிறுவர் போசாக்கு குறைபாடு தொடர்பான மிகத் துல்லியமான தரவுகள் குழுவிற்கு வழங்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலம் சிறுவர் போசாக்குக் குறைபாட்டை நீக்குவது தொடர்பான பொதுவான பிரேரணை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் எனவும் குழு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளது.