ஹிங்குரன்கொட, யுதகனாவ பிரதேசத்தில் பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (29) பிற்பகல் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவனால் இக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குற்றத்தை செய்த பின்னர், அவர் மெதிரிகிரிய பிரதேசத்தில் மறைந்திருந்த போது ஹிங்குரன்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் அவரது ஒன்றரை மாத குழந்தையும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை தற்போது மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்த பெண்ணின் தந்தை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் ஆபத்தான நிலையில் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் ஹிங்குரன்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.