நாத்தண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்த போது அதிபரால் கண்டிக்கப்பட்டதால் மனமுடைந்த மாணவர்கள் இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
காணாமல் போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே குறித்த மாணவர்கள் இருவரும் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரண்டு மாணவர்களும் காணமல் போனதைப் பற்றி, ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் தந்தையும் மாரவில தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
புகையிலை மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை வைத்திருந்த நிலையில், பிடிப்பட்டதையடுத்து அதுபற்றி பாடசாலை அதிபர் அந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்ததாகவும், அதனையடுத்து அவ்விருவரும் அழுதுகொண்டிருந்ததாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
மாரவில தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட இரு மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.