சீனாவுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (19) காலை பீஜிங்கில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கடியை சமாளிக்க இதுவரை இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் வரவேற்றார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து பூரண ஆதரவை வழங்கும் எனவும் சீன நிதி அமைச்சர் உறுதியளித்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், சீனாவுடன் நெருக்கமாகச் செயற்படும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதாகவும் சீன நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.