இமிடேஷன் நகைகளை தங்க நகைகள் என காட்டி, ஒரு கோடியே 87 இலட்சத்து 75 ஆயிர ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெரும் நிதி நிறுவனமொன்றின் அடமானப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் நிர்வாகத்தினால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பெந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வேறொரு பெண்ணுடன் அடமானப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளதுடன், அவர் இல்லாத போது, பாதுகாப்பு கெமராவை மறைத்து, இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக காட்டுவதற்கு, அதற்கு நிகரான நிறையுடைய போலி தங்க நகைகளை வைத்து, ரசீதுகள் மூலம் இலட்ச கணக்கில் பணத்தை மோசடி செய்து, ஆடிட்டர்களிடம் சிக்காமல் இருக்க கணிணி டேட்டா சிஸ்டத்தில் பதிந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.