ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் சாட்சிய விசாரணை நேற்று (10) ஆரம்பமானது.
இதன்படிஇ சதி மற்றும் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று ஆரம்பமானது.
தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்ததாக வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கத் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர தெரிவித்தார்.
வழக்கின் 17 வது பிரதிவாதி இறந்துவிட்டதாகவும், அதன்படி 24 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டு அதிக குற்றச்சாட்டுகள் உள்ள வழக்காக பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.