மஹியங்கனை ரஜமகா விகாரையில் யானைகளுக்கான இடத்தில் சிகிச்சை பெற்று வந்த சீதா யானை தற்போது சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பேராதனை கால்நடை வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அஷோக தங்கொல்லவின் தலைமையில் சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த போது, சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.
பேராசிரியர் அஷோக தங்கொல்லவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்றுவரும் சீதா யானை, இதற்கு முன்னர் ஸ்கேன் மற்றும் X-ray பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
யானையின் உடலில் 8 ரவைகள் உள்ளமை ஸ்கேன் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தை Metal Detector மூலம் சோதனை செய்தபோது, உடலில் உலோகப்பொருட்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதனை முழுமையாக உறுதி செய்துகொள்வதற்கும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் நேற்று யானைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சீதா யானையின் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தூள் வகையை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, மஹரகம சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு மேம்பாட்டு அமைச்சினால் சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.