சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு நாடு என்ற வகையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய கடினமான காலகட்டத்தை நாம் தற்போது கடந்து வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையைப் பெற்றதன் பின்னர், 2024 ஆம் ஆண்டில் நாட்டை சாதகமான பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்ல முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.